சேலம் மாவட்டத்தில் 122 மையங்களில் 30,443 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நேற்று 122 மையங்களில் 30 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 122 மையங்களில் 30 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
122 மையங்கள்
சேலம் மாவட்டத்தில் தினமும் கொரோனாவுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவின் பாதிப்பு மாவட்டத்தில் 81 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் 122 ஆக அதிகரிக்கப்பட்டன. மேலும் அந்த மையங்களுக்கு 31 ஆயிரத்து 520 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் நேற்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஏராளமானவர்கள் ஆர்வமுடன் காலை 7 மணி முதலே மையங்களுக்கு வர தொடங்கினர்.
30,443 பேர்
இதையடுத்து காலை 9 மணி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பல மையங்களில் பொதுமக்களை வகுப்பறையில் அமர்ந்திருக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதுதவிர மாற்றத்திறனாளிகளின் வீட்டுக்கு நேரிடையாக சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story