தோட்டத்திலேயே அழுகி வீணாகும் கத்தரிக்காய்கள் - விவசாயிகள் கவலை


தோட்டத்திலேயே அழுகி வீணாகும் கத்தரிக்காய்கள் - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 18 Jun 2021 6:52 PM IST (Updated: 18 Jun 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் கத்தரிக்காய்கள் தோட்டத்திலேயே அழுகி வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவெண்காடு,

அன்றாட உணவில் முக்கிய இடம்பிடிக்கும் காய்கறிகளில் ஒன்றாக கத்தரிக்காய் விளங்குகிறது. கத்தரிக்காயில் மலச்சிக்கலை போக்குவது, இதயத்தை பலப்படுத்துவது, ரத்த அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. கத்தரிக்காய் பயிரிட தை மற்றும் ஆடி பட்டங்கள் உகந்ததாக கருதப்படுகிறது. சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடி, செம்பதனிருப்பு, அல்லவிளாகம், ராதாநல்லூர், இளையமதுகூடம், புதுத்துறை, பட்டவளாகம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் கத்தரிக்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தை மாத பட்டத்தில் பயிரிடப்பட்ட கத்தரிக்காய்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கத்தரிக்காய் விற்பனை முற்றிலும் பதிக்கப்பட்டு விட்டது. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற கத்தரிக்காயை ஒரு கிலோ ரூ.5-க்கு கூட வாங்க ஆள் இல்லை என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக பல விவசாயிகள் கத்தரிக்காய் அறுவடையை நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக தோட்டத்திலேயே கத்தரிக்காய்கள் அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க கூறுகையில், ‘நல்ல விலை கிடைக்கும் என்று கத்தரிக்காயை அதிகமாக சாகுபடி செய்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கால் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் கத்தரிக்காயை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுவிட்டோம்.

இதனால் காய்கள் செடியிலேயே அழுகி கிடக்கிறது. எனவே மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து தோட்டக்கலைத்துறை மூலம் கத்தரிக்காயை கொள்முதல் செய்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story