திண்டுக்கல் வழியாக செல்லும் ரெயில்களில் அலைமோதும் கூட்டம்; டிக்கெட் முன்பதிவுக்கு தினமும் நீண்ட வரிசை
ஊரடங்கு தளர்வால் வெளியூர்களுக்கு திரும்பும் மக்களால் திண்டுக்கல் வழியாக செல்லும் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் டிக்கெட் முன்பதிவுக்கு நீண்ட வரிசை காணப்படுகிறது.
திண்டுக்கல்:
ஊரடங்கு தளர்வால் வெளியூர்களுக்கு திரும்பும் மக்களால் திண்டுக்கல் வழியாக செல்லும் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் டிக்கெட் முன்பதிவுக்கு நீண்ட வரிசை காணப்படுகிறது.
வெளியூர்களுக்கு செல்லும் மக்கள்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த மாதம் 10-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளியூர்களில் வியாபாரம் மற்றும் வேலை செய்தவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர். இதற்கிடையே கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
இன்னும் ஒருசில நாட்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் வெளியூர்களுக்கு திரும்பிய படி உள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பலர் சென்னை, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட ஊர்களில் வேலை, வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
ரெயில்களில் அலைமோதும் கூட்டம்
ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்த இவர்களில் பெரும்பாலானோர் தற்போது வெளியூர்களுக்கு திரும்பி செல்கின்றனர். அதேநேரம் பஸ்கள் இயக்கப்படாததால் ரெயில்களில் மட்டுமே செல்ல வேண்டியது இருக்கிறது. அதேபோல் உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விரும்புவோரும் ரெயிலில் செல்கின்றனர்.
இதனால் திண்டுக்கல் வழியாக சென்னை, மைசூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரெயில்கள் மட்டுமின்றி தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் வரை காலியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் தற்போது பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
முன்பதிவுக்கு நீண்ட வரிசை
மேலும் ரெயில்களில் செல்வதற்கு அனைத்து வகையான டிக்கெட்டுக்கும் முன்பதிவு செய்ய வேண்டியது இருக்கிறது. எனவே ஒருசிலர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் ரெயில் நிலையத்துக்கு நேரில் வந்து டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
அந்தவகையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் காலை முதல் மாலை வரை டிக்கெட் கவுண்ட்டர்கள் முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. எனினும் வரிசையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story