கீழையூர் பகுதியில் மாங்காய் விளைச்சல் அமோகம்


கீழையூர் பகுதியில் மாங்காய் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 18 Jun 2021 9:07 PM IST (Updated: 18 Jun 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

கீழையூர் பகுதியில் மாங்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேளாங்கண்ணி:
கீழையூர் பகுதியில் மாங்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

மாங்காய் சாகுபடி

நாகை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக கடற்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கடலோர பகுதிகளான புதுப்பள்ளி, தெற்குபொய்கை நல்லூர், பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரதான தொழிலாக  மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலால் லட்சக்கணக்கான மா மரங்கள் சாய்ந்து பேரிழப்பை ஏற்படுத்தியது. கஜா புயலால் முறிந்த மரங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துளிர்விட்டு காய்க்க தொடங்கி உள்ளன. இப்பகுதிகளில் பங்கனப்பள்ளி, ஒட்டு மாங்காய், ருமேனியா செந்தூரா, நீளம், காலபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாங்காய்கள் காய்த்து விற்பனைக்கு தயாராக உள்ளன. 

அதிக சுவை

இங்கு காய்க்கும் மாங்காய்கள் அதிக சுவையாக இருப்பதாலும், சதைபற்று அதிகமாக இருப்பதாலும் இந்த மாங்காய்களை தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கி செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு கீழையூர் பகுதியில் மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. தோப்புகளில் எங்கு பார்த்தாலும் மரங்களில் கொத்து, கொத்தாக மாங்காய் காய்த்து தொங்குகிறது.  ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தனியார் நிறுவனங்கள் மாங்காய்களை கொள்முதல் செய்ய வராததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

விலை வீழ்ச்சி

விலை வீழ்ச்சியால் கடந்த ஆண்டு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட ருமேனியா, ரூ. 7-க்கும், ரூ. 50-க்கு விற்ற பங்கனப்பள்ளி ரூ.20-க்கும், ரூ.40 முதல் ரூ.50 வரை விற்ற ஒட்டு மாங்காய் ரூ.12-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகள் வராததால் மாங்காய்களை பறிக்காததால் மரத்திலேயே பழுத்து கிழே விழுந்து வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். .
மேலும் மரத்தில் உள்ள மாம்பழத்ததை அணில், பறவைகள் தின்று வீணாகிறது. எனவே மாங்காய்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய அரசு மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story