முதியவரின் வீட்டை அபகரித்த பெண் உள்பட 2 பேர் கைது
முதியவரின் வீட்டை அபகரித்த பெண் உள்பட 2 பேர் கைது
கோவை
பிரதமரின் திட்டத்தில் மானியம் பெற்றுத்தருவதாக கூறி முதியவரின் வீட்டை அபகரித்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கூட்டாளிகள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிரதமர் திட்டத்தில் மானியம்
கோவையை அடுத்த வெள்ளானைப்பட்டியை சேர்ந்தவர் மசாக் கவுண்டர் (வயது 81). இவருக்கு 4 சென்டில் சொந்த வீடு உள்ளது. இவரிடம் ஆரோக்கிய சார்லஸ் (வயது44), சுதா (43) ஆகியோர் வீட்டின் பத்திரத்தை வைத்து பிரதமரின் திட்டத்தில் ரூ.2 லட்சம் மானியம் வாங்கலாம் என்று கூறி உள்ளனர்.
இதற்கு ஆரோக்கிய சார்லஸ் பெயரில் பவர் ஆவணம் எழுதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை நம்பிய மசாக்கவுண்டர், ஆரோக்கிய சார்லஸ் பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்து உள்ளார்.
வீடு அபகரிப்பு
அவர், அதை பயன்படுத்தி வீட்டை சுதாவின் பெயருக்கு மாற்றிக் கொடுத்து உள்ளார். அப்போது மசாக்கவுண்டருக்கு காசோலைகள் மூலம் பணம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து வீட்டை அபகரித்து தங்கள் பெயருக்கு மாற்றியது மசாக்கவுண்டருக்கு தெரிய வந்தது.
உடனே அவர், இந்த மோசடி பற்றி உறவினர்களின் உதவியுடன் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக் டர் பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதா மற்றும் ஆரோக்கிய சார்லஸ் ஆகியோரை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் நேற்று சுதா, ஆரோக்கிய சார்லஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் செந்தில், கணேசமூர்த்தி, ரமணிநாதன், மற்றொரு செந்தில் ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story