அனுமதியின்றி கொரோனா பரிசோதனை எடுத்த ரத்த பரிசோதனை மையத்திற்கு சீல்
விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி கொரோனா பரிசோதனை எடுத்த ரத்த பரிசோதனை மையத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் சேர்மன் சிதம்பரனார் தெருவில் தனியார் ரத்த பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் கடந்த சில நாட்களாக உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி அரசு நிர்ணயித்த கட்டணமான ரூ.900-ஐ விட ஒவ்வொரு நபருக்கும் ரூ.2,500 வரை வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் டி.மோகனுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து அந்த ரத்த பரிசோதனை மையத்திற்கு சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ரத்த பரிசோதனை மையத்திற்கு ‘சீல்’
அதன்பேரில் நேற்று மதியம் விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் ரமணன் உள்ளிட்டோர் அந்த ரத்த பரிசோதனை மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பொதுமக்கள் சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அதோடு அங்கிருந்த பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ரத்த பரிசோதனை மையத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்ததோடு அதன் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கினர்.
Related Tags :
Next Story