கடலூரில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கடலூரில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Jun 2021 11:00 PM IST (Updated: 18 Jun 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர், 

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 38), தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா, தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் தமிழ்ச்செல்வன், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும், அதற்கு பிரியங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த தமிழ்ச்செல்வன், நேற்று முன்தினம் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்துகொண்ட தமிழ்ச்செல்வனின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து அவரது தாய் விஜயா, கடலூர் புதுநகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தமிழ்ச்செல்வன்  வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளது. 

குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் பிறந்து வருவேன். என்னுடைய இரண்டு அக்காக்களையும், அம்மாவையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எனது மனைவி தற்போது என்னுடன் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story