கம்பத்தில் ஏறி பணியாற்ற மின்ஊழியர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
வால்பாறை பகுதியில் கம்பத்தில் ஏறி பணியாற்ற மின்ஊழியர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வால்பாறை
வால்பாறை பகுதியில் கம்பத்தில் ஏறி பணியாற்ற மின்ஊழியர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மின்கம்பங்களில் பாசிகள்
வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி துணை மின்நிலையம் மூலம் வால்பாறை மற்றும் அங்குள்ள அனைத்து எஸ்டேட்கள், தேயிலை தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு மின்வாரிய பணி சவாலானது ஆகும். ஏனென்றால் பருவமழை காலத்தில் வால்பாறையில் மழை பெய்து கொண்டே இருக்கும்.
இதனால் இங்குள்ள மின்கம்பங்களில் பாசிகள் படர்ந்து அதன் மீது ஏற முடியாத நிலையில்தான் எப்போதுமே இருக்கும். மின்பழுது ஏற்படும்போது அதன் மீது எளிதாக ஏற முடியாத நிலை நீடித்து வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மின்ஊழியர்கள் சிரமம்
பொதுவாக மலைப்பிரதேசத்தில் உள்ள மின்வாரிய பணிக்கு எளிதாக மின்கம்பத்தில் ஏறி பணி செய்ய ஏணியோ அல்லது நவீன உபகரணங் களோ வழங்கப்பட்டு இருக்கும்.
ஆனால் வால்பாறை பகுதியில் உள்ள மின்ஊழியர்களுக்கு அதுபோன்று கருவிகள் கொடுக்கப்படவில்லை. இதனால் பாசிகள் படர்ந்த மின்கம்பத்தில் உயிரை பணயம் வைத்து ஏறி, மழையில் நனைந்து கொண்டு வேலை செய்யக்கூடிய நிலை உள்ளது.
சில நேரத்தில் மின்கம்பத்தில் ஏறும்போது, தவறி கீழே விழுந்து காயங்களுடன் தப்பித்துச்செல்லும் நிலையும் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மின் ஊழியர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார் கள்.
நவீன உபகரணங்கள்
இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின்விளக்கு கள் பழுதடைந்தாலோ அவற்றை உடனடியாக சரிசெய்ய முடிவது இல்லை.
வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மின்விளக்குகள் எரியவில்லை என்றால் தெருக்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வால்பாறை பகுதியில் உள்ள மின்ஊழியர்களுக்கு மின்கம்பத்தில் ஏற நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story