மணப்பாறை அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
மணப்பாறை அருகே பணி வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வையம்பட்டி,
மணப்பாறை அருகே பணி வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியப்பகுதி அமயபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆணையூர் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்களுக்கு நேற்று பணி வழங்கப்படவில்லை. ஆனால் அதே ஊராட்சியில் மற்றொரு பகுதியில் பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் மணப்பாறை அமயபுரம் சாலையில் ஆணையூர் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் மண்சட்டி, மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களையும் வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை இன்ஸ்பெக்டர் மணமல்லி, வையம்பட்டி ஒன்றிய தலைவர் குணசீலன், ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வெளியில் வேலைக்கு செல்ல முடியாது. போக்குவரத்து வசதியும் இல்லை. மாதத்தில் 6 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் சூழ்நிலையில் அதையும் தராமல் இருந்தால் என்ன செய்ய முடியும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும் என்றும் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இனி பணி வழங்கிட வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story