திண்டுக்கல்லில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு
திண்டுக்கல்லில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் முடிந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதன்மூலம் நேற்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு வழக்கம் போல் கடல் மீன்கள் வந்தன. இதில் ராமேசுவரம், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் திண்டுக்கல்லுக்கு வந்தன.
திண்டுக்கல் மீன் மார்க்கெட் மற்றும் தெற்குரத வீதி, என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளில் மீன் கடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 2 மாதமாக விரும்பிய கடல் மீன்களை வாங்க முடியாமல் தவித்த மக்கள் நேற்று ஆர்வத்துடன் மீன்களை வாங்கி சென்றனர்.
அதேநேரம் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இதில் பாறை மீன் கிலோ ரூ.450 முதல் ரூ.600 வரையும், விளமீன் ரூ.350 முதல் ரூ.500 வரையும், சங்கரா ரூ.300 முதல் ரூ.400 வரையும், நெத்திலி மீன் ரூ.250 முதல் ரூ.400 வரையும், வெள்ளை கிழங்கா மீன் ரூ.200 முதல் ரூ.300 வரையும், நண்டு ரூ.300 முதல் ரூ.400 வரையும், இறால் ரூ.350 முதல் ரூ.450 வரையும் விற்பனை ஆகின.
அதேநேரம் வளர்ப்பு மீன்களான கட்லா ரூ.150-க்கும், கெண்டை ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தடை காலம் முடிந்து மீன்கள் வரத்து ஏற்பட்ட நிலையில் அவை விலை உயர்ந்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story