வேடப்பட்டியில் உள்ள கல் குவாரியில் அதிக சக்தி கொண்ட வெடிகளைப் பயன்படுத்துவதால் வீடுகள் சேதமடைவதாகக் கூறி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள்
வேடப்பட்டியில் உள்ள கல் குவாரியில் அதிக சக்தி கொண்ட வெடிகளைப் பயன்படுத்துவதால் வீடுகள் சேதமடைவதாகக் கூறி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள்
போடிப்பட்டி:
மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டியில் உள்ள கல் குவாரியில் அதிக சக்தி கொண்ட வெடிகளைப் பயன்படுத்துவதால் வீடுகள் சேதமடைவதாகக் கூறி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி சிறைபிடிப்பு
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான கல் குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த வேடபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக சக்தி கொண்ட வெடி பொருட்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று கல் குவாரியிலிருந்து கற்களை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கல் குவாரிகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களிலிருந்து கல் குவாரிகளுக்கு போதிய இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் இந்த குவாரி குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு அருகில் உள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
விவசாயிகள் பாதிப்பு
மேலும் கல் குவாரியில் அதிக சக்தி வாய்ந்த வெடிகளை தொடர்ச்சியாக வெடிக்கச் செய்கின்றனர். இதனால் வேடபட்டி பகுதி மட்டுமல்லாமல் சுமார் 3 கிலோ மீட்டர் வரை வீடுகள் நில நடுக்கம் வந்தது போல அதிர்கின்றன. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வெடி வெடிக்கும்போது வீடு இடிந்து மேலே விழுந்து விடுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில வீடுகளில் ஓடுகள் அதிர்வால் உடைந்து விழுகிறது. மேலும் நீண்ட தொலைவு வரை கற்கள் பறந்து வந்து விழுவதால் இந்த பகுதியிலுள்ள விளை நிலங்களுக்கு கூலி ஆட்கள் வேலைக்கு வருவதற்கே அஞ்சுகின்றனர். அத்துடன் இந்த குவாரியில் வெடி வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வால் இதய நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் விதிகளை மீறி 150 அடி ஆழத்துக்கு மேல் இந்த குவாரியில் பாறைகள் வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்ப்பாதைகள் பாதிப்புக்குள்ளாகி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போனது. மேலும் இந்த குவாரியை ஒட்டி ஓடும் புறம்போக்கு நீரோடையின் நீரோட்டத்தில் தடை ஏற்பட்டு சீராக தண்ணீர் வருவதில்லை. இதனால் பல விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நிரந்தர தீர்வு
மேலும் இரவு பகலாக கனரக லாரிகளில் அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். இதனால் சாலைகள் சேதமடைந்ததுடன் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்துடன் செயல்படும் இந்த குவாரியின் அனுமதி புதுப்பிக்கப்பட்டது எப்படி என்பது மர்மமாகவே உள்ளது. கனிம வளத்துறையினரும் வருவாய்த் துறையினரும் கண்டுகொள்ளாத நிலையில் மாவட்ட கலெக்டர் இந்த குவாரியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தினம் தினம் நில நடுக்கத்தை சந்தித்து வரும் இந்த பகுதி மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
Related Tags :
Next Story