நகைக்கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
கம்பத்தில், அடுத்தடுத்து இருந்த நகைக்கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் வரதராஜபுரம் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன்(வயது 48). இவர் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையை அடுத்து கம்பம் காளவாசல் தெருவை சேர்ந்த அசோக்(45) என்பவரின் நகைக்கடை உள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கால் நகைக்கடையை திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை ரெங்கநாதனும், அசோக்கும் நகைக்கடைக்கு சென்றனர். அப்போது நகைக்கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
நகைகள் தப்பின
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 நகைக்கடைகளையும் திறந்து பார்த்தனர். அப்போது நகைகள் அனைத்தும் அங்குள்ள லாக்கர்களில் பாதுகாப்பாக இருந்தன. நகைகள் எதுவும் திருடுபோகவில்லை.
சம்பவம் குறித்து அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி விரைந்து வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர் மூலம் தடயங்கள் பதிவுசெய்யப்பட்டது. மேலும் துப்பு துலக்க மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டது. அது நகைக்கடைகளில் மோப்பம் பிடித்தவாறு வேலப்பர்கோவில் தெரு, அரசமரம், காந்திசிலை, வ.உ.சி திடல் வழியாக பத்திரப்பதிவு அலுவலகம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த கொள்ளை முயற்சியில். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கம்பத்தில் பரபரப்பாக காணப்படும் முக்கிய வீதியில் உள்ள நகைக்கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story