நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் மையம்
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் மையம் அமைக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் மையம் அமைக்கப்பட உள்ளது.
வேகம் குறைந்தது
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி பலர் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் பலியாகினர். அரசின் தீவிர நடவடிக்கையின் பயனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.
இந்த 2-வதுபரவலின்போது கடந்த முறையை காட்டிலும் அதிகம் பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் உடலில் ஆக்சிஜன் குறைவால் மூச்சுதிணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பலியாகினர். இந்த முறை ஆக்சிஜன் பற்றாக்குறை கொரோனா தொற்றாளர்களை குணப் படுத்துவதில் பெரும் பின்னடைவாக இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் தேவையை தன்னிறைவு பெறச்செய்யும் வகையில் அரசு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க அரசு உத்தரவிட்டுஉள்ளது. கொரோனா 3-வது அலை வந்தால் அதனை முன்எச்சரிக்கையுடன் சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அதற்கான கட்டமைப்புகளை திட்டமிட்டு நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். தற்போதைய நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 11 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. இதில் பாண்டிச்சேரியில் இருந்து தனியார் நிறுவனத்தினர் லாரியில் ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பி செலகின்றனர்.
நடவடிக்கை
கொரோனா 2-வது அலையின்போது இந்த ஆக்சிஜன் கொள்கலன் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமல்லாது தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
இனிவரும் கால தேவையை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஆக்சிஜன் கொள்கலன் அமைந்துள்ள பகுதியின் அருகில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் காற்றின் மூலம் உற்பத்தி செய்து இந்த கொள்கலனில் நிரப்பும் வகையில் இந்த உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது.
இடம் தேர்வு
இதன்மூலம் தனியார் நிறுவனத்திடம் வாங்கும் நிலைமாறி ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனை இந்த உற்பத்தி மையம் மூலம் தினமும் உற்பத்தி செய்து கொள்ளலாம்.
இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு தயாரித்து விரைவில் அதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் மலர்வண்ணன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story