லாரி கவிழ்ந்து டிரைவர் காயம்
ஸ்ரீவைகுண்டம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார்.
ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 40). லாரி டிரைவர். இவர் டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு கயத்தாறில் இருந்து உடன்குடிக்கு சென்று கொண்டிருந்தார். ஸ்ரீவைகுண்டம் அருகே திருச்செந்தூர்- நெல்லை சாலையில் உள்ள புளியங்குளம் வளைவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே ஆறுமுகநேரி தனியார் கெமிக்கல் ஆலையில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு திராவகம் (ஆசிட்) ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி வந்தது.
புளியங்குளம்-கருங்குளம் இடையே உள்ள சாலை வளைவில் இரு கார்கள் கண்இமைக்கும் நேரத்தில் திராவகம் ஏற்றிய லாரியை முந்திக் கொண்டு வந்தது. இதனால் எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி டிரைவர் லாரியை திடீர் பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாடசாமி சிறிது காயத்துடன் உயிர் தப்பினார்.
ஜல்லி லாரி நிறுத்தாமல் இருந்தால் எதிரே வந்த லாரி மீது மோதி ஆசிட் ஏற்றி வந்த ேடங்கர் லாரி வெடித்து மிகப்பெரிய விபத்து நேர்ந்திருக்கும். டிப்பர் லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story