அரசு பஸ்களை சுத்தம் செய்து பழுதுநீக்கும் பணிகள் தீவிரம்
விழுப்புரம் பணிமனைகளில் அரசு பஸ்களை சுத்தம் செய்து பழுதுநீக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
தமிழகத்தில் 5-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. அடுத்தகட்டமாக 6-வது முறையாக நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கின்போது மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்றும், இந்த தளர்வுகளில் பொது போக்குவரத்தை தொடங்க அரசு ஆலோசித்து வருகிறது. இதையொட்டி நடந்த மருத்துவ குழுவினருக்கான ஆலோசனை கூட்டத்தில், தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை தவிர ஏனைய பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கலாம் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் முதல்கட்டமாக 50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்தை தொடங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனால் நாளை முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது.
புனரமைப்பு பணிகள் தீவிரம்
இதையொட்டி அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பஸ் போக்குவரத்தை தொடங்க போக்குவரத்துக்கழகமும் தங்களை முழுவதுமாக தயார்படுத்தி வருகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஸ்களை புனரமைப்பு பணி செய்து தயார் நிலையில் வைத்திருக்கும்படி போக்குவரத்துக்கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 1, 2, 3 மற்றும் செஞ்சி, திண்டிவனம் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை பழுதுநீக்கி துப்புரவு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அந்தந்த பணிமனைகளின் கிளை மேலாளர்கள் மேற்பார்வையில் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், போர்மேன்கள், டெக்னீசியன்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி திரவம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு பஸ்களின் என்ஜின்கள் பழுது பார்க்கப்பட்டு டயர்களில் காற்று அடிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் ஆயில் சர்வீஸ் பார்க்கப்பட்டு எந்தவித கோளாறும் இல்லாமல் பஸ்களை இயக்க புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story