புதிய பாடப்புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது
தர்மபுரி மாவட்டத்தில் புதிய பாடப்புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
தர்மபுரி:
பாடப்புத்தகங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 1,338 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 1 லட்சத்து 49 ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட பாடப்புத்தகங்கள் தர்மபுரியில் வைக்கப்பட்டன.
அனுப்பும் பணி
இதைத்தொடர்ந்து இந்த பாடப்புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் வாகனங்கள் மூலமாக ஒவ்வொரு பள்ளிக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 2021-2022-ம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடப்புத்தகங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவை அந்தந்த பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story