தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும்


தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Jun 2021 10:33 PM IST (Updated: 19 Jun 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும் என்று சப்-கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

பொள்ளாச்சி

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும் என்று சப்-கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழையின்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் (பொறுப்பு) மகாராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் முடியும் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகபடியான மழைப்பொழிவு இருக்க கூடும் என்பதால், சூழ்நிலையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

தாலுகா எல்லைக்குள் உள்ள மழை மானிகள் மற்றும் அவற்றின் இருப்பிடங்களை ஆய்வு செய்து, அவை நல்ல நிலையில் இயங்குவதை தாசில்தார்கள் உறுதி செய்ய வேண்டும்.

குழுக்கள் அமைக்க வேண்டும்

கிராமங்களில் மழை காலங்களில் ஏதேனும் பாதிப்புகள் எதிர்பாராமல் நடந்தால், அவற்றை உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் நீச்சல் மற்றும் மரம் ஏறும் திறன் கொண்டவர்களை தேர்ந்தெடுத்து தன்னார்வலர் குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு தன்னார்வலர் குழுவிலும் 10 பேர் இருக்க வேண்டும்.

வருவாய் துறை, போலீசார், தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார துறை, வேளாண்மை துறை அலுவலர்கள் அடங்கிய மண்டல குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும்.

நிவாரண முகாம்கள்

பேரிடர் காலங்களில் முகாம்கள் அமைக்க சில பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நிவாரண முகாம்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள கட்டிடங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

முகாம்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் போது செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்தும், மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய துறைகளுடன் இணைந்து மாதிரி ஒத்திகை நடத்த வேண்டும்.

பருவமழையின்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு, இருதய நோய் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றிற்கு தடையில்லா மின்வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ளத்தில் சிக்கும் கால்நடைகளை மீட்டு, அங்கேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளான பொள்ளாச்சி நகராட்சியில் மரப்பேட்டை பள்ளம், பொட்டுமேடு, சுடுகாட்டு பள்ளம், கண்ணப்பன் நகர், அண்ணா காலனி, பெரியார் காலனி, ஜமீன்ஊத்துக்குளி, கிருஷ்ணா குளம், தேவம்பாடிவலசு ஆகிய குளங்களில் உள்ள ஒடைகளை தூர்வார வேண்டும்.

மின்வாரிய பணியாளர்கள்

சாலைகளில் மழையின் போது சாய்ந்து விழுந்து போக்குவரத்திற்கு இடையூறாக கிடக்கும் மரங்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும். இதற்குரிய உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழையினால் சேதமாகும் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

காற்று மற்றும் மழையினால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் தடைபடும் போது, அதை உடனடியாக சரிசெய்ய மின்வாரிய பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். மேலும் பாதிப்புகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மனித, கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வீடுகள் பாதிப்பு அடைந்தால் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல், தாசில்தார்கள் அரசகுமார், விஜயகுமார், ராஜா, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தமிழ்மணி, விவேகானந்தன், நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story