நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம்


நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 20 Jun 2021 12:02 AM IST (Updated: 20 Jun 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்தது.

நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள் மூலம் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு மையங்களில் தடுப்பூசி போடப்படவில்லை.

நெல்லை மருத்துவ கல்லூரிக்கு நேற்று முன்தினம் 500 கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே வந்தது. இந்த தடுப்பூசியை நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கும், பாளையங்கோட்டை பெருமாள்புரம் நகர்நல மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற இடங்களில் தடுப்பூசி போடவில்லை. தொடர்ந்து மாலையில் நெல்லை மாவட்டத்திற்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 8 ஆயிரம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசிகள் நெல்லை மருத்துவ கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து மையங்களும் அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்றது. 

காலை 7 மணிக்கு நெல்லை மருத்துவ கல்லூரிக்கு தடுப்பூசி போடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது.

Next Story