கர்நாடகத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு; மந்திரி சுதாகர் தகவல்


மந்திரி சுதாகர்
x
மந்திரி சுதாகர்
தினத்தந்தி 20 Jun 2021 1:29 AM IST (Updated: 20 Jun 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நாளை தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளதாகவும், 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் நாளை தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளதாகவும், 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கலெக்டர்களுக்கு உத்தரவு

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நாளை (அதாவது இன்று) நிறைவு பெறுகிறது. ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் செய்யப்படும் என்பதை முதல்-மந்திரி எடியூரப்பாவே முடிவு செய்து அறிவிப்பார். ஊரடங்கு காரணமாக கா்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.

மைசூரு மாவட்டத்தில் மட்டும் 10 சதவீதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு உள்ளது. 13 மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது. 11 மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி திருவிழா

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக மாநிலம் முழுவதும் வருகிற 21-ந் தேதி (நாளை) கொரோனா தடுப்பூசி போடும் திருவிழா அரசு மூலம் நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவின் போது மாநிலம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி திருவிழா காரணமாக மாநிலத்தில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இருக்காது. அதுபோல், வருகிற 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாகும். அன்றைய தினம் அனைவரும் வீட்டில் இருந்து யோகா செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க யோகா செய்வது அவசியமானதாகும்.
இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story