கோவில் அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம், 15 வகையான மளிகை பொருட்கள் - கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்
நாகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம், 15 வகையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம்,
கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் 2-ம் அலையின் காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் கோவில்களில் வாழ்வாதாரம் இழந்துள்ள சம்பளம் இல்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகை பொருட்கள் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி நாகை மாவட்டத்தில் 755 சிறிய கோவில்கள், 132 பெரிய கோவில்களில் பணியாற்றும் 218 பேருக்கு இந்த கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கீழ்வேளூர் நாகைமாலி, முகமதுஷாநவாஸ், நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன், கோவில் செயல் அலுவலர்கள் பூமிநாதன், தங்கபாண்டியன், சண்முகராஜ், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை ஆணையர் தென்னரசு நன்றி கூறினார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலப்பாடி, இலுப்பூர், ஆலங்குடி, ஆதமங்கலம் பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.38.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து ராதா மங்கலம், இருக்கை கிராமத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு நிவாரண தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணிகள், தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுபணித்துறை செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர் கமலகண்ணன், பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் அருண் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story