டிக்கெட் முன்பதிவுக்கு கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படுமா?


டிக்கெட் முன்பதிவுக்கு கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 20 Jun 2021 8:43 PM IST (Updated: 20 Jun 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க டிக்கெட் முன்பதிவுக்கு கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

திண்டுக்கல்: 


ஊரடங்கு
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை கடைகள், மார்க்கெட்டுகள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதே போல் அரசு, தனியார் நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. அதேபோல் ரெயில் நிலையத்திலும் முன்பதிவு டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் வழங்குவதற்காக பகலில் 2 கவுண்ட்டர்களும், இரவில் ஒரு கவுண்ட்டரும் செயல்பட்டு வருகிறது.

முழு ஊரடங்கு அமலில் இருந்த போது திண்டுக்கல் வழியாக சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட பிற ஊர்களுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் ரெயில்கள் மூலம் வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

கூட்ட நெரிசல்
இதன் காரணமாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தினமும் ஏராளமானோர் வருகின்றனர். 2 கவுண்ட்டர்கள் மட்டுமே செயல்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. 

இதன் காரணமாக அங்கு கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. சமூக இடைவெளியையும் பயணிகள் மறந்துவிடுகின்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, கவுண்ட்டர்களில் பணியாற்றும் ஊழியர்கள் முன்பதிவு ரெயில் டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் ஆகிய 2 டிக்கெட்டுகளையும் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு பணிச்சுமையும் அதிகமாக உள்ளது. 

மேலும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படும். இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் கவுண்ட்டர்களை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story