நாகையில், ரூ.5 கோடி கருவாடுகள் தேக்கம்


நாகையில், ரூ.5 கோடி கருவாடுகள் தேக்கம்
x

கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் நாகையில், ரூ.5 கோடி மதிப்பிலான கருவாடுகள் தேக்கம் அடைந்துள்ளன. இவை சேதமடைந்து வருவதால் குறைந்து விலைக்கு கோழி தீவனத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்:
கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் நாகையில், ரூ.5 கோடி மதிப்பிலான கருவாடுகள் தேக்கம் அடைந்துள்ளன. இவை சேதமடைந்து வருவதால் குறைந்து விலைக்கு கோழி தீவனத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

கருவாடு காயவைக்கும் தளம்

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குடிசைகள் அமைத்து கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 
நெத்திலி, வாளை, கிழங்கா, ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, சேதமடைந்த வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களில் கருவாடு தயாரிக்கப்படுகிறது. இது தவிர கெளுத்தி உள்ளிட்ட மீன்களிலும் கோழி தீவனத்துக்காக கருவாடு தயாரிக்கப்படுகிறது.இங்கிருந்து திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், கரூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் கருவாடுகளுக்கு தனி மவுசு உண்டு. 
மீன்பிடி தடைக்காலம்

அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் தினந்தோறும் 1 டன் முதல் அதிகபட்சமாக 10 டன் வரை கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும். தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையிலும், கொரோனா ஊரடங்கு காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சில பைபர் படகு மீனவர்கள் மட்டுமே தொழிலுக்கு செல்வதால் கருவாடு தயாரிக்க தேவையான மீன்கள் கிடைக்கவில்லை.
கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் கருவாடுகள் விற்பனை செய்ய முடியாமல் வீணாகி வருகிறது. இதனால் வேறுவழியின்றி குறைந்த விலைக்கு கோழித் தீவனத்திற்கு அனுப்பி வைக்க கருவாடு தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

கோழி தீவனம்
 
நல்ல நிலையில் இருக்கும் கருவாடு சாப்பாட்டுக்கும், மீதமுள்ள கருவாடுகள் கோழித் தீவனத்திற்கும் என தரம் பிரிக்கும் பணியில் கருவாடு தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கருவாடு தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:- 
அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுக கருவாடு காயவைக்கும் தளத்தில் ஏராளமான மீன் வகைகளை கொண்டு கருவாடு தயாரித்து வந்தோம். எங்கள் குடிசையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தி, அயிலை, நெத்திலி, திருக்கை, சுறா, வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகையான கருவாடுகளை தயாரித்து வருகிறோம்.
மீன்கள் வரத்தை பொறுத்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு டன் வரையில் கருவாடு தயாரித்துள்ளோம். தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தும், கொரோனா ஊரடங்கு காரணமாக மீன் விற்பனையில் சுணக்கம் ஏற்படும் என்பதால் நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன் கிடைக்காததால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கருவாடு தயாரிக்கும் பணி முற்றிலும் முடங்கிப்போனது.

ரூ.5 கோடி கருவாடு தேக்கம்

சேமித்து வைத்திருந்த கருவாடுகளை வாங்க வியாபாரிகள் வராததால், காடுவாடுகள் சேதமடைய தொடங்கிவிட்டன. அதனை குடிசையிலிருந்து வெளியே எடுத்து தரம் பிரித்து வருகிறோம். அதில் சாப்பாட்டுக்கு தேவையான நல்ல நிலையில் உள்ள கருவாடுகள் ஒரு புறமும், மீதமுள்ளவை கோழி தீவனத்துக்கும் என தரம் பிரித்து வைத்துள்ளோம். இதில் 75 சதவீதத்துக்கும் மேல் கருவாடுகள் சேதமடைந்துள்ளன. இதேபோல ஒவ்வொரு குடிசையிலும் சேர்த்து மொத்தம் ரூ.5 கோடி மதிப்பிலான கருவாடுகள் தேக்கம் அடைந்து  சேதமாகி வருகின்றன. இதனால் வேறுவழியின்றி கருவாடுகளை கோழி தீவனத்துக்காக அனுப்பி வைக்க உள்ளோம்.  உணவுக்காக ரூ.250 விற்பனை செய்த ஒரு கிலோ கானாங்கெளுத்தி கருவாடு தற்போது கோழித் தீவனத்திற்காக ரூ.40-க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட கிளிசை கருவாடு ரூ.35-க்கும், ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்ட குத்துவா கருவாடு ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மழை, வெயிலில் இருந்து கருவாடுகளை பாதுகாத்து வந்த எங்களின் உழைப்பு தற்போது வீணாகி உள்ளது. இதனால் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story