முதுமலை வனப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளாக காட்டு தீ ஏற்படவில்லை


முதுமலை வனப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளாக காட்டு தீ ஏற்படவில்லை
x
தினத்தந்தி 20 Jun 2021 10:13 PM IST (Updated: 20 Jun 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளாக காட்டு தீ ஏற்படவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளார்

கூடலூர்

முதுமலை வனப்பகுதியில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளாக காட்டு தீ ஏற்படவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளார்

முதுமலை வனப்பகுதி

நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதுதவிர சந்தனம், ரோஸ்வுட், தேக்கு உள்ளிட்ட விலையுர்ந்த மரங்கள், மூலிகை செடிகள், அரியவகை தாவரங்கள் காணப்படுகிறது. 

மேலும் இங்கு சிறு வன உயிரினங்களும் உள்ளன. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும் மற்றும் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இதனால் வனப்பகுதி பசுமையாக காணப்படும். மீதமுள்ள மாதங்களில் பனி மற்றும் கோடை காலம் என்பதால் வறட்சி நிலவுவது வழக்கம்.

காட்டுத் தீ

வறட்சி காலத்தில் வனப்பகுதிக்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இது காட்டுத் தீயாக மாறி வனப்பகுதி சேதம் அடைந்து வருகிறது. இதில், முயல், பாம்புகள் உள்ளிட்ட சிறு வன உயிரினங்களும் அழிந்து விடுகிறது. 

இதேபோல் முதுமலை புலிகள் காப்பக சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை வனப்பகுதி வீசி செல்வதால் காட்டுத்தீ பரவி விடுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் காட்டுத் தீ பரவி 100 ஏக்கர் வனப்பகுதி நாசமாகி வருகிறது. 

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக முதுமலை வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

ஊரடங்கு

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் வரத்து மிக குறைவாகவே காணப்பட்டது. 

பின்னர் மீண்டும் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி முதுமலை புலிகள் காப்பகம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

மேலும் புலிகள் காப்பக சாலையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதியில் அவ்வபோது பருவமழை பெய்து வந்தது. இது தவிர காட்டு தீயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பந்திப்பூர்

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படவில்லை. இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்தில் அருகே உள்ள கர்நாடக அரசுக்கு சொந்தமான பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலும் காட்டுத் தீ ஏற்படவில்லை.

ஊரடங்கு மற்றும் வறட்சியான காலங்களில் பரவலாக மழை பெய்ததால் காட்டுத் தீ பரவ வில்லை. மேலும் முன்னெச்சரிக்கையாக முக்கிய சாலையோரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் காட்டுத் தீ பரவாத வகையில் வனத்தை பாதுகாத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story