கொரடாச்சேரியில் ஒருபுறம் தண்ணீர்; மறுபுறம் வறண்ட ஆறு: மேட்டூர் அணைநீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை விவசாயிகள் வலியுறுத்தல்


கொரடாச்சேரியில் ஒருபுறம் தண்ணீர்; மறுபுறம் வறண்ட ஆறு: மேட்டூர் அணைநீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jun 2021 10:22 PM IST (Updated: 20 Jun 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரியில் ஒரு புறம் தண்ணீர் பாய்ந்தோடினாலும், மறுபுறம் ஆறு வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் மேட்டூர் அணை நீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரடாச்சேரி:-

கொரடாச்சேரியில் ஒரு புறம் தண்ணீர் பாய்ந்தோடினாலும், மறுபுறம் ஆறு வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் மேட்டூர் அணை நீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வெட்டாறு பாசனம்

மேட்டூர் அணையில் 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, நீர் கல்லணைக்கு வந்த பின்னர், அந்தநீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் என 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு கடைமடை பகுதிகளுக்கு சென்று சேரும். 
திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை பெரும்பாலான பகுதி ஆறுகளுக்கு வெட்டாறு பாசனம் மூலமே தண்ணீர் செல்கிறது. அந்த வகையில் வெட்டாறில் வினாடிக்கு 3,703 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஆறுகளில் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த தண்ணீர் ஒரே நேரத்தில் அனைத்து ஆறுகளுக்கும் பகிர்ந்து அளிக்க முடியாத நிலை உள்ளது. 

வறண்ட ஆறு

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து வெளியேறும் நீர் கொரடாச்சேரியில் பாண்டவையாறு, வெட்டாறு என பிரிந்து ஓடம்போக்கியாறு, வாழவாய்க்கால், காட்டாறு என பல கிளை ஆறுகளாக பிரிந்து மாவட்டத்தின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும். தற்போது வெட்டாற்றில் 3,703 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் அனைத்து ஆறுகளுக்கும் தேவையான தண்ணீரை பிரித்து விட முடியாத நிலை உள்ளது. 
இதனால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வழங்க முடியவில்லை. குறிப்பாக கொரடாச்சேரி பேரூராட்சியில் தெற்கு பகுதியில் உள்ள பாண்டவையாற்றில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. அதேநேரம் கொரடாச்சேரி பேரூராட்சியின் வடக்கு பகுதியில் உள்ள வெட்டாறில் தண்ணீர் இதுவரை வந்து சேரவில்லை. இதனால் வெட்டாறு தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. 

முறை வைக்காமல்...

அதேபோல கிளை ஆறுகளான ஓடம்போக்கியாறு, வாழவாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் வந்தால்தான் குறுவை சாகுபடியை நம்பிக்கையுடன் மேற்கொள்ள முடியும். இதற்கு மேட்டூர் அணையில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீரை முறை வைக்காமல் திறந்து விட்டு, தண்ணீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் சென்று குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பாய்ந்தால் தான் குறுவை சாகுபடி பணிகளை தொடங்க முடியும். கொரடாச்சேரி வெட்டாறில் பாக்கம் பகுதியில் வெட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், ஓடம்போக்கியாற்றின் குறுக்கே காட்டூரில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதாலும் வெட்டாறு வழியிலான பாசன ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

தண்ணீர் விரயமாக வாய்ப்பு

வெட்டாறில் பாசன நீர் திறக்கப்படும் குளம், குட்டை, வயல், வாய்க்கால்களில் சென்று சேர போதுமான அளவிற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. 
தற்போது வரும் குறைந்த அளவு நீரால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்று சேர வாய்ப்பு கிடைக்காது. பிரதான ஆறுகளில் நேரடியாக சென்று கடலில் கலக்கும் நிலை மட்டுமே ஏற்படும்‌. இதனால் மேட்டூரில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் விரயமாகவே வாய்ப்பு உள்ளது. அதனால் மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். 

தண்ணீர் கிடைக்க நடவடிக்கை

ஆறுகளில் உள்ள ரெகுலேட்டர்களை மூடி அப்பகுதியில் உள்ள வாய்க்கால், குளம் குட்டைகளை தண்ணீரால் நிரப்பவேண்டும். அதன் பின்னரே அடுத்த பகுதிக்கு தண்ணீரை வினியோகம் செய்ய வேண்டும். 
இப்படி கடைமடை பகுதிவரை ஆறு, வாய்க்கால், குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளில் போதுமான தண்ணீர் தேங்குவதை நீர்ப்பாசனத்துறையினர் கண்காணித்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story