திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்ற ரெயில்கள் மூலம் வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்ற ரெயில்கள் மூலம் வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்ற ரெயில்கள் மூலம் வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பின்னலாடை நிறுவனங்கள்
பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் திருப்பூரில் அதிகம் உள்ளன. உரிய நேரத்தில் ஆர்டர்களை அனுப்பி வைக்க வேண்டியிருப்பதால் பின்னலாடைத் தொழிலில் தொழிலாளர்களின் தேவை எப்போதும் உண்டு.
தமிழகத்தின் பிற மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்த பின்னலாடை தொழில், தற்போது வடமாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பை அள்ளி வழங்கிவருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பின்னலாடை தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அதன் பிறகு வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டனர்.
வடமாநில தொழிலாளர்கள் வருகை
பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி இடுபொருள் உற்பத்தி நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அரசு அனுமதித்தது. அதன் பிறகு 25 சதவீத தொழிலாளர்களுடன் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மற்ற நிறுவனங்களும் விரைவில் இயங்க வாய்ப்பு இருப்பதால் திருப்பூரை நோக்கி வடமாநில தொழிலாளர்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள். வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில்களில் திருப்பூர் நோக்கி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 9.30 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் வந்தது. இந்த ரெயிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் வந்தனர்.
கொரோனா பரிசோதனை
அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்தனர். நேற்று மட்டும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்துள்ளனர். தொழில் நிறுவனங்கள் படிப்படியாக செயல்பட உள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவல் திருப்பூர் மாவட்டத்தில் குறைந்து வரும் நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம். நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் இருக்கிறார்களா? என்று சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் தொழில் நிறுவனங்களில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனை மற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story