உடல்நலக்குறைவால் காலை இழந்தவருக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்
உடல்நலக்குறைவால் காலை இழந்தவருக்கு மளிகைக்கடை விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்து கொடுத்தனர்
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த பல ஆண்டுகளாக திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக நடக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்துள்ளது. இவரின் இடது காலில் ரத்த ஓட்டம் செல்லாத காரணத்தால் அந்த காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அவரது இடது கால் அகற்றப்பட்டுள்ளது. இதனால் எங்கும் வேலைக்கு செல்ல முடியாமல் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் அவர் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் குடும்ப வருமானத்திற்காக அப்பகுதியில் கேனில் வைத்து டீ விற்று வந்துள்ளார். இவரது நிலையை அறிந்த தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராஜேந்திரம் கிளை நிர்வாகிகள் அவருக்கு உதவி செய்ய நினைத்தனர். இதையடுத்து இந்த இயக்கத்தின் குளித்தலை ஒன்றிய தலைவர் சதாசிவம் மற்றும் இயக்க நிர்வாகிகளின் ஏற்பாட்டில் தளபதி விஜய் மளிகை மற்றும் காய்கறிக் கடை என்ற பெயரில் மணிமாறனுக்கு அப்பகுதியில் கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளனர். இந்த புதிய கடையை இந்த இயக்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் நேற்று திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் பாலு, குளித்தலை ஒன்றியத் தலைவர் சதாசிவம், ராஜேந்திரம் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story