குழாய் உடைந்ததால் வீணாக செல்லும் குடிநீர்


குழாய் உடைந்ததால் வீணாக செல்லும் குடிநீர்
x
தினத்தந்தி 21 Jun 2021 12:14 AM IST (Updated: 21 Jun 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையத்தில் குழாய் உடைந்ததால் குடிநீர் வீணாக செல்கிறது. எனவே அதை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நெகமம்

பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையத்தில் குழாய் உடைந்ததால் குடிநீர் வீணாக செல்கிறது. எனவே அதை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

குடிநீர் குழாயில் உடைப்பு 

ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதிகளான கொல்லப் பட்டி, காரப்பாடி, ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டன்பாளையம், ஜோத்தம்பட்டி, மூலனூர், கள்ளிப்பட்டி, கருமாபுரம், சின்னநெகமம், உதவிபாளையம், என்.சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இதற்காக அனுப்பர்பாளையம் கிராமத்தில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வந்து, பின்னர் சப்ளை செய்யப் படுகிறது. 

இந்த நிலையில் கொண்டேகவுண்டன்பாளையம் அரசு பள்ளி அருகில் கடந்த 2 மாதங்களுக்கு முன் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

சரி செய்யவில்லை 

ஆனால் இதுவரை சரிசெய்யப்படாததால் குடிநீர் சாலையில் வீணாக சென்று வருகிறது. மேலும் இந்த உடைப்பு காரணமாக அந்தப்பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதுடன், வாகனங் கள் செல்லும்போது தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. 

இதனால் அந்தப்பகுதியில் நடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் இந்த பள்ளம் இருப்பது தெரியாமல் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதற்குள் இறங்கும்போது கீழே விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலையும் நீடித்து வருகிறது.

போராட்டம் நடத்தப்படும் 

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த 2 மாதங்களாக குடிநீர் வீணாக செல்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக இங்கு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே இதை சரிசெய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story