மாவட்டத்தில் 127 இடங்களில் சிறப்பு முகாம்கள்: 22,230 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நேற்று 127 மையங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்களில் 22 ஆயிரத்து 230 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 127 மையங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்களில் 22 ஆயிரத்து 230 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 82 ஆயிரத்து கடந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடவில்லை.
இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலத்துக்கு 22 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
127 மையங்கள்
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் 127 மையங்களில் நேற்று தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெற்றன. சேலம், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், மேச்சேரி, காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், சங்ககிரி, எடப்பாடி, மகுடஞ்சாவடி உள்பட பல்வேறு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். குறிப்பாக அனைவரும் முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியுடன் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
சேலம் மாநகர்
சேலம் மாநகரில் 30-க்கும் மேற்பட்ட மையங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதாவது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என மையங்கள் முன்பு அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது. காலை 9 மணியில் இருந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது.
சேலம் மாநகரை பொறுத்தவரையில் ரெட்டியூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு கலைக்கல்லூரி, அம்மாபேட்டை அண்ணா மருத்துவமனை, சீலநாயக்கன்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 4 மையங்களில் மட்டும் பொதுமக்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ள 123 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.
22,230 பேருக்கு தடுப்பூசி
சேலம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் தடுப்பூசி மையங்களுக்கு அதிகாரிகள் அவ்வப்போது சென்று ஆய்வு மேற்கொண்டனர். சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மணக்காடு காமராஜர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு கலைக்கல்லூரி ஆகிய மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏராளமான கூட்டம் காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பு செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று 127 மையங்களில் நடந்த தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்களில் மொத்தம் 22 ஆயிரத்து 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story