மனைவியை கத்தியால் குத்திய ரெயில்வே ஊழியர், போதையில் சாய்ந்தார்
ஆரல்வாய்மொழி அருகே மனைவியை கத்தியால் குத்திய முன்னாள் ரெயில்வே ஊழியர் போதையில் இருந்ததால் போலீசார் 3 மணி நேரம் காத்திருந்து கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே மனைவியை கத்தியால் குத்திய முன்னாள் ரெயில்வே ஊழியர் போதையில் இருந்ததால் போலீசார் 3 மணி நேரம் காத்திருந்து கைது செய்தனர்.
ரெயில்வே ஊழியர்
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் அருமை தாஸ் (வயது 65), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகம்மாள் கணவரை விட்டு பிரிந்து தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். ஆனாலும், அருமை தாஸ் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் அருமைதாஸ் மதுபோதையில் முருகம்மாள் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தான் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த முருகம்மாள் நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3 மணி நேரம் காத்திருப்பு
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் அருமை தாசை பிடிக்க அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் மது போதையில் கதவை பூட்டிவிட்டு உள்ளே நிதானத்தை இழந்தபடி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தப்பி செல்லாமல் இருப்பதற்காக அவரது வீட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து போதை தெளிந்த பின்பு அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story