2 கோவில்களில் துணிகர கொள்ளை


2 கோவில்களில் துணிகர கொள்ளை
x
தினத்தந்தி 21 Jun 2021 1:39 AM IST (Updated: 21 Jun 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே 2 கோவில்களில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே 2 கோவில்களில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அம்மன் கோவில்
ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பள்ளிக்கூட தெருவில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் பூஜை நடைபெறும். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பூசாரி தங்கராஜ் பூஜைகள் செய்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். 
நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் கருவறைகளின் கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து பூசாரிக்கு தகவல் கொடுத்தனர். உடனே பூசாரி தங்கராஜ் வந்து பார்த்தபோது கோவிலில் முத்தாரம்மன், பத்ரகாளியம்மன், பார்வதி அம்மன் கருவறைகளில் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சாமியின் துணிமணிகள், பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. 
கொள்ளை
மேலும் 3 அம்மனின் கழுத்தில் கிடந்த 13 கிராம் தாலி, 3 கிராம் எடையுள்ள 2 மூக்குத்திகள், 2 கிராம் நெற்றிப்பொட்டு உள்பட 2½ பவுன் நகைகள், 350 கிராம் எடையுள்ள 3 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம், சின்ன உண்டியலில் உள்ள பணம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. 
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிச்செல்வம், பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகை பதிவுகளை சேகரித்தனர். 
மற்றொரு சம்பவம்
இதேபோல இந்த கோவிலின் அருகே உள்ள சுடலைமாடசாமி கோவிலிலும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். கோவில் கதவின் பூட்டை உடைத்து சாமியின் 4 கிராம் எடையுள்ள கண்மலர், 2 கிராம் எடை உள்ள பொட்டு என 6 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 2 கோவில்களிலும் ஒரே நபர்கள் தான் கொள்ளையடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 
கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். ஒரே நாளில் 2 கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story