புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை


புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை
x
தினத்தந்தி 21 Jun 2021 1:49 AM IST (Updated: 21 Jun 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

ஆவூர்
குடிபோதையில் தகராறு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆலங்குடியை சேர்ந்தவர் ஜெம்புலிங்கம். இவரது மகன் வினோத்குமார் (வயது 30). இவர், ஆலங்குடியில் திருமண விழாவிற்கு தேவையான ஒலி பெருக்கி, பந்தல், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார். வினோத்குமாருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஆலங்குடி ஊரணிக்கரை அருகே அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் வெம்மணி ஊராட்சி நரியப்பட்டியை சேர்ந்த அய்யர் என்ற கருப்பையா (25) மற்றும் சிலர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை 
அப்போது டீக்கடைக்காரர் ராஜேந்திரன், அனைவரும் இங்கிருந்து கிளம்புங்கள் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கருப்பையா, ராஜேந்திரனை தாக்கியுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த வினோத்குமார், கருப்பையாவை தட்டிக்கேட்டார். அப்போது வினோத்குமாருக்கும், கருப்பையாவிற்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
 பின்னர், அங்கிருந்து புறப்பட்ட கருப்பையா நரியப்பட்டி சென்று தனது அண்ணன்கள் மருதமுத்து (29), சிலம்பரசன் (27) மற்றும் அதே ஊரை சேர்ந்த துரையரசன் மகன் திவாகர் (25), பாலமுத்து மகன் முனியாண்டி (40), மாரிமுத்து மகன் சிவகுமார் (25), வெம்மணியை சேர்ந்த பிச்சை மகன் அஜித் (24), பழனிவேல் மகன் ரஞ்சித்குமார் (23) மற்றும் பலருடன் ஆலங்குடிக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த வினோத்குமார், அவரது அண்ணன் பூவிழியரசன் (32) ஆகியோரை கட்டையால் தலை உள்ளிட்ட பல இடங்களில் பலமாக தாக்கினர். இதனை தடுக்க வந்த வினோத்குமாரின் தந்தை ஜெம்புலிங்கம் அவரது உறவினர் முருகேசன், சீதாலட்சுமி ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. 
தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த வினோத்குமார் மற்றும் பூவிழியரசன் ஆகிய இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வினோத்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இந்த கொலை சம்பவம் குறித்து கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்ரமணியன், மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி புதுமாப்பிள்ளை வினோத்குமாரை கொலை செய்ததாக கருப்பையா, மருதமுத்து, சிலம்பரசன், வெம்மணி ஊராட்சி மன்ற தலைவர் ராசாத்தி மகன் பாரதி, முனியாண்டி, அஜித், ரஞ்சித்குமார் ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். பின்னர், கைது செய்யப்பட்ட 7 பேரையும் மண்டையூர் போலீசார் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
உடல் ஒப்படைப்பு 
முன்னதாக திருச்சி அரசு மருத்துவமனையில் வினோத்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல், ஆலங்குடிக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது வினோத் குமாரின் மனைவி, பெற்றோர், உறவினர்கள், கிராமத்தினர் கதறி அழுதனர்.
போலீஸ் குவிப்பு
 இந்தநிலையில் வினோத்குமார் உயிரிழந்ததால் ஆலங்குடி, நரியப்பட்டி ஆகிய கிராமத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி. ராதிகா, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோர் நேற்று காலை ஆலங்குடிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இரண்டு கிராமங்களிலும், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story