நீர்வரத்து அதிகரிப்பு; கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்கிறது
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்கிறது. அணைக்கு வினாடிக்கு 19,728 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மண்டியா:நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்கிறது. அணைக்கு வினாடிக்கு 19,728 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கே.ஆர்.எஸ். அணை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தில் பெங்களூரு, குடகு, சிக்கமகளூரு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த தொடர் கனமழையால் மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
கிடுகிடுவென உயர்வு
நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 16,588 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 19,728 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 91.66 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 89.16 அடியாக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடிக்கு மேலாக உயர்ந்துள்ளது.
கடந்த 2 நாட்களில் 5 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,158 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை கூடிய விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story