கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு
x
தினத்தந்தி 21 Jun 2021 2:27 AM IST (Updated: 21 Jun 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி சேர்க்கை விவகாரத்தில் தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

மண்டியா:கல்லூரி சேர்க்கை விவகாரத்தில் தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

கல்லூரி மாணவி தற்கொலை

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா தளகவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 65). இவரது மகள் பந்தவ்யா (17). இவர் அங்குள்ள கல்லூரியில் சமீபத்தில் சேர்ந்தார். கல்லூரி சேர்க்கை விவகாரம் தொடர்பாக தந்தை, மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தகராறு நேற்று முன்தினம் இரவும் நடந்ததாக தெரிகிறது. 

இதனால் பந்தவ்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது படுக்கை அறைக்கு சென்ற பந்தவ்யா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதிர்ச்சியில் தந்தை சாவு

நேற்று காலை தனது மகள் அறைக்கு சென்ற ராஜூ, மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பந்தவ்யாவின் உடலை கட்டிப்பிடித்து ராஜூ கதறி அழுதபடி இருந்தார். 

அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மலவள்ளியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மலவள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்த பந்தவ்யா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

பெரும் சோகம்

போலீஸ் விசாரணையில், கல்லூரி சேர்க்கை தொடர்பாக தந்தை, மகளுக்கு தகராறு ஏற்பட்டதாகவும், இதில் மனம் உடைந்த பந்தவ்யா தற்கொலை செய்ததும், இந்த அதிர்ச்சியில் ராஜூ உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுபற்றி மலவள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story