வீடு கட்ட குழி தோண்டியபோது 8 அடி உயர சிலை கிடைத்தது


வீடு கட்ட குழி தோண்டியபோது 8 அடி உயர சிலை கிடைத்தது
x
தினத்தந்தி 21 Jun 2021 2:33 AM IST (Updated: 21 Jun 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே வீடு கட்ட குழி தோண்டியபோது 8 அடி உயர சிலை கிடைத்துள்ளது.

கீழப்பழுவூர்:

8 அடி உயர சிலை
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 41). விவசாயியான இவர் வீடு கட்டுவதற்காக அவரது இடத்தில் குழி தோண்டி உள்ளார். சுமார் 6 அடி ஆழத்திற்கு தோண்டியபோது கல் ஒன்று தென்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு வேலை பார்த்தவர்கள், சிலை போல் தெரிகிறதே என்று மண்ணை விலக்கி பார்த்துள்ளனர். இதில் சுமார் 8 அடி உயரமுள்ள சிலை ஒன்று குப்புறவாக்கில் உள்ளது தெரியவந்தது. அதனை வெளியே எடுக்க பல்வேறு முயற்சிகள் செய்தும், சிலையை வெளியே எடுக்க முடியவில்லை.
வெளியே எடுக்க...
ஆகையால் அந்த சிலை சுமார் ஒரு டன் எடை இருக்கலாம் என்றும், பொக்லைன் எந்திரம் உதவியுடன் தான் எடுக்க முடியும் என்பதை அறிந்த அவர்கள், இது பற்றி போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சிலையை வெளியே எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலையின் பின்புறம் மட்டுமே வெளியே தெரிவதால் என்ன சிலை என்பது தெரியவில்லை. வீடு கட்ட குழி தோண்டிய இடத்தில் 8 அடி உயர சிலை தென்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story