கும்மிடிப்பூண்டி அருகே விபத்து: வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 வயது குழந்தை பலி


கும்மிடிப்பூண்டி அருகே விபத்து: வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 21 Jun 2021 1:11 AM GMT (Updated: 2021-06-21T06:41:15+05:30)

கும்மிடிப்பூண்டி அருகே மினி லோடு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், தந்தை கண் எதிரே 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய சோழியம்பாக்கம் காலனியைச்சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 32). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிரியா (30) என்ற மனைவியும், சுஜி (3) என்ற மகளும், மற்றும் 1½ வயதில் ஹேமந்த் என்ற மகனும் உண்டு.

இந்த நிலையில் பார்த்திபன் தனது குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் நேற்று பொன்னேரி அடுத்த அமூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் ரெயில்வே மேம்பாலத்தை கடந்து கவரைப்பேட்டை நோக்கி அவர்கள் செல்லும் போது, அதே திசையில் மினி லோடு வேன் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது.

இதற்கிடையே அந்த லோடு வேனை டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பின் தொடர்ந்து வந்த பார்த்திபன் எதிர்பாராதவிதமாக லோடு வேனின் பின்புறம் பயங்கரமாக மோதினார்.

குழந்தை சாவு

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு, 3 வயது பெண் குழந்தை சுஜி, ரத்த வெள்ளத்தில் தனது பெற்றோர் கண் எதிரே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பார்த்திபன் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் அங்கேயே மயங்கி கிடந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கதினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மகன் ஹேமந்த் மட்டும் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story