இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்ல அனுமதி டிரைவர்கள் சங்கத்தினர் கோரிக்கை
இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்ல அனுமதி பெற்று தர வேண்டும் என்று அனைத்து வாகன டிரைவர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க நேற்று வந்தனர். இவ்வாறு மனு அளிக்க வந்த மக்கள் சிலர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் முரளிதரன், மக்கள் கூட்டத்தை பார்த்து காரில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அப்போது தேனி அல்லிநகரம் அழகர்சாமி காலனி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் முத்துலட்சுமி தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இங்கு நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு பட்டா இல்லை. எனவே, பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கொடுத்த மனுவில், "வடபுதுப்பட்டி இந்திரா காலனியில் அருந்ததியர் மக்களுக்கு கடந்த 1989-ம் ஆண்டு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. சிலர் தங்களின் குடும்ப வறுமையால் பட்டாவை அடகு வைத்து கந்துவட்டிக்கு பணம் பெற்றனர். பணம் கொடுத்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்துள்ளனர். எனவே, அத்தகைய நிலத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
தொழிலாளர்களுக்கு அனுமதி
கம்பம் வட்டார முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கொடுத்த மனுவில், "மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மதிய உணவு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் முகாம்கள் நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
தமிழ்நாடு அன்னை தெரசா அனைத்து வாகன டிரைவர்கள் நல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தினமும் 50 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள், 2 ஆயிரம் வாகனங்களில் சென்று வந்தோம். கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழிலாளர்களும் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே, இடுக்கி மாவட்ட கலெக்டரிடம் கலந்தாலோசித்து தினமும் நாங்கள் வேலைக்கு சென்று வரவும், கூலித்தொழிலாளர்களை வேலைக்கு வாகனங்களில் ஏற்றி சென்று வரவும் அனுமதி பெற்று கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியிருந்தனர்.
இதுபோல் போடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story