கேரளா செல்ல அனுமதி மறுப்பு பஸ்சில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய மேற்கு வங்க தொழிலாளர்கள்


கேரளா செல்ல அனுமதி மறுப்பு பஸ்சில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய மேற்கு வங்க தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 21 Jun 2021 1:21 PM GMT (Updated: 2021-06-21T18:51:04+05:30)

கேரளாவுக்கு வேலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் மேற்கு வங்க தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு பஸ்சில் கண்ணீருடன் திரும்பி சென்றனர்.


கம்பம்:
தமிழக-கேரள மாநில எல்லையாக இடுக்கி மாவட்டம் உள்ளது. இங்கு இடுக்கி, சாந்தம்பாறை, உடும்பன்சோலை ஆகிய பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலையில் இருந்த மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் சிலர் கொரோனா 2-வது அலை காரணமாக சொந்த ஊருக்கு சென்று இருந்தனர்.
இந்தநிலையில் கேரள ஏஜெண்டுகள் மூலம் ஏலக்காய் தோட்டங்களில் வேலைக்கு செல்ல மேற்கு வங்கத்தை சேர்ந்த 49 தொழிலாளர்கள் தங்கள் 7 குழந்தைகளுடன் இ-பாஸ் பெற்று தனியார் பஸ் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டு வந்தனர். 
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை அவர்கள் தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம்மெட்டுவை வந்தடைந்தனர். அங்கு கேரள மாநில சோதனைசாவடியில் இருந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர், கொரோனா பரிசோதனை சான்று இல்லாததால் தொழிலாளர்களை கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
ஏஜெண்டுகள் வரவில்லை
பின்னர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் ஏஜெண்டுகள் வந்து அவர்களை அழைத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொழிலாளர்களை அழைத்து செல்ல ஏஜெண்டுகள் வரவில்லை.
இதையடுத்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு பேசினார். எனினும் ஏஜெண்டுகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, இதனால் கம்பம் போலீசார், நள்ளிரவு தொழிலாளர்களை கம்பத்துக்கு அழைத்து வந்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று வரை ஏஜெண்டுகள் மேற்கு வங்க தொழிலாளர்களை அழைத்து செல்ல முன் வரவில்லை. இதையடுத்து தேனி மாவட்ட நிர்வாக உத்தரவின்படி போலீசார், தொழிலாளர்களை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு பஸ்சில் திருப்பி அனுப்பி வைத்தனர். 
வாழ்வாதாரத்தை தேடி வந்த தொழிலாளர்கள் கேரள அரசின் அனுமதி மறுக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு கண்ணீருடன் திரும்பி சென்றனர்.


Next Story