கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், பாண்டவையாற்றின் தடுப்பணைக்கு வந்தடைந்தது


கல்லணையில்  இருந்து  திறந்து விடப்பட்ட  தண்ணீர், பாண்டவையாற்றின் தடுப்பணைக்கு வந்தடைந்தது
x
தினத்தந்தி 21 Jun 2021 9:48 PM IST (Updated: 21 Jun 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இறையான்குடி பாண்டவையாற்றின் தடுப்பணைக்கு வந்தடைந்தது. அப்போது விவசாயிகள் பூக்களை தூவி வரவேற்றனர்.

வேளாங்கண்ணி:
 கல்லணையில்  இருந்து  திறந்து விடப்பட்ட தண்ணீர் இறையான்குடி பாண்டவையாற்றின் தடுப்பணைக்கு வந்தடைந்தது. அப்போது விவசாயிகள் பூக்களை தூவி வரவேற்றனர்.

மேட்டூர் அணை திறப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட) விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என மூன்றுபோகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். 
இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் பாசனத்திற்காக கடந்த 16-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தடுப்பணைக்கு தண்ணீர் வந்தது

கீழையூர் ஒன்றியம் இறையான்குடியில் உள்ள பாண்டவையாறு தடுப்பணைக்கு நேற்று வந்தடைந்தது. தமிழ்நாடு காவிரி விவசாய சங்க கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் தலைமையில் விவசாயிகள் தடுப்பணையின் தண்ணீர் திறப்பு திருகு பலகைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர்.
பின்னர் தண்ணீர் திறக்கப்படடது. அப்போது ஆற்றில் விதை நெல் தெளித்தும், பூக்களை தூவியும் வரவேற்றனர். இதில்  ஊராட்சி மன்ற தலைவர்கள் சேகர், இந்திராணி ராமச்சந்தின், தமிழ்நாடு காவிரி விவசாய சங்க கூட்டு இயக்க துணை தலைவர் பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் லென்சோயா சிவபாதம் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்

பாண்டவையாற்றின் மூலம் இறையான்குடி பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  மேலும் இந்த ஆறு இறையான்குடிக்கு பாசன பகுதியாகவும், அதேசமயம் வடக்கு பனையூர், தெற்கு பனையூர், அகரம், முப்பத்திகோட்டகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வடிகாலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆற்றில் தண்ணீர் வந்தடைந்துள்ளதால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story