மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் தொங்கிய வாலிபர் விருத்தாசலத்தில் பரபரப்பு


மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் தொங்கிய வாலிபர் விருத்தாசலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 5:39 PM GMT (Updated: 21 Jun 2021 5:39 PM GMT)

விருத்தாசலத்தில் மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் வாலிபர் ஒருவர் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

 அதன்படி நேற்று மின்தடை செய்யப்பட்டு, உயர்அழுத்த மின்பாதையில் மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.


இந்த நிலையில் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரின் ஊழியர்களான  விழுப்புரம் மாவட்டம் தென்குச்சிபாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன்கள் கங்காதரன் (23), அஜித் (21) ஆகியோர் விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள 2 மின்கம்பத்தில் தனித்தனியாக ஏறி, மின்கம்பியை மாற்றி அமைக்கும் பணியை மேற்கொண்டதாக தெரிகிறது.


மின்சாரம் தாக்கியது

அப்போது, திடீரென கங்காதரன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் மின்கம்பத்தில் உள்ள மின்விளக்குக்கு இடையே தொங்கியபடி உயிருக்கு போராடிகொண்டிருந்தார். 

அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதை பார்த்து பதறிய அஜித், வேகமாக மின்கம்பத்தில் இருந்து இறங்கி, தனது அண்ணன் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த மின்கம்பம் மீது ஏறி அவரை தாங்கி பிடித்தார். அப்போது அவரையும் லேசாக மின்சாரம் தாக்கியது.

 இதற்கிடையே அங்கிருந்த  மின்வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அந்த வழியாக சென்ற உயர் மின் அழுத்த பாதையின் மின்சாரத்தை துண்டித்தனர். 

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் கங்காதரன், அஜித் இருவரையும் பத்திரமாக மீட்டனர். 

மருத்துவமனையில் சிகிச்சை

தொடர்ந்து காயமடைந்த அண்ணன், தம்பி இருவரையும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதனிடையே விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். 
அதில், பெரியார் நகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தாலும், கங்காதரன் ஏறிய மின்கம்பத்தின் மேல் பகுதியில் சென்ற உயர் மின் அழுத்த பாதையில் மின்சார வினியோகம் இருந்து கொண்டு தான் இருந்தது. 


அதே நேரத்தில் கங்காதரன், அஜித் ஆகியோர் நெடுஞ்சாலை பணியை மேற்கொள்ளும் ஒரு ஒப்பந்ததாரரின் பணியாளர்கள் ஆவர். இவர்கள் சாலை பணிக்காக, மின்கம்பியை மாற்றி அமைக்கும் வகையில் மின்கம்பத்தின் மீது ஏறியது தெரியவந்தது.

ஒப்பந்ததாரர் மீது புகார்

இதுகுறித்து விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா  கூறுகையில், உயர்மின் அழுத்த பராமரிப்பு பணிக்காக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த நிலையில் எங்களிடம் முறையாக எந்த அனுமதியும் பெறாமல், மின்கம்பத்தின் மீது ஏறி மின்சார கம்பியை மாற்றி அமைக்க முயன்றுள்ளனர். இது தொடர்பாக அந்த ஒப்பந்ததாரர் மீது  விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story