கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தையை மீட்க வலியுறுத்தி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட உறவினர்கள்-போலீசார் பேச்சுவார்த்தை


கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தையை மீட்க வலியுறுத்தி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட உறவினர்கள்-போலீசார் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 21 Jun 2021 11:21 PM IST (Updated: 21 Jun 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தையை மீட்க வலியுறுத்தி உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தர்மபுரி:
பச்சிளங்குழந்தை கடத்தல்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி. தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி மாலினி (வயது 19). இவருக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பிரசவ வார்டில் உள்ள குளியல் அறைக்கு மாலினி சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. 
இதுபற்றி தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது ஒரு பெண், குழந்தையை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உறவினர்கள் முற்றுகை
இந்த நிலையில் நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாலினியை நேரில் சந்திக்க அவருடைய உறவினர்கள் வந்தனர். அவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியை திடீரென முற்றுகையிட்டு கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு பணியை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குழந்தையை கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மாலினியின் உறவினர்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story