தளி அருகே காவலுக்கு சென்றபோது காட்டு யானை மிதித்து விவசாயி பலி
தளி அருகே காவலுக்கு சென்றபோது காட்டு யானை மிதித்து விவசாயி பலியானார்.
தேன்கனிக்கோட்டை:
இதுபற்றிய விவரம் வருமாறு:-
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள உளிபெண்டா கிராமத்தை சேர்ந்தவர் குண்டப்பா (வயது 63). விவசாயி. இவருக்கு வெங்கடம்மா என்ற மனைவியும், பசுராபி என்ற மகளும் உள்ளனர். குண்டப்பா வனப்பகுதியையொட்டி உள்ள தனது நிலத்தில் ராகி பயிரிட்டுள்ளார். இதனை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தினமும் இரவு அவர் காவலுக்கு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு தனது நிலத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது அவரது நிலத்தின் பக்கத்து தோட்டத்தில் காட்டு யானை ஒன்று பயிர்களை தின்று கொண்டிருந்தது. இதனை குண்டப்பா கவனிக்காமல் யானை அருகே சென்றார். அவரை பார்த்ததும் ஆக்ரோஷமடைந்த யானை குண்டப்பாவை துரத்தியது.
மிதித்து கொன்றது
இதனால் குண்டப்பா அலறி யடித்துக்கொண்டு ஓடினார். விடாமல் துரத்திய யானை குண்டப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்தநிலையில் நேற்று காலை அந்த பக்கமாக சென்றவர்கள் யானை தாக்கி குண்டப்பா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் தளி வனத்துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி வனபாதுகாவலர் கார்த்தியாயினி அங்கு விரைந்து சென்று விசாரித்தார். பின்னர் போலீசார் குண்டப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளி அருகே காவலுக்கு சென்ற விவசாயியை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story