தூர்வாரும் பணிகளால் கடைமடை வரை தண்ணீர் செல்லும்


தூர்வாரும் பணிகளால் கடைமடை வரை தண்ணீர் செல்லும்
x
தினத்தந்தி 21 Jun 2021 5:53 PM GMT (Updated: 2021-06-21T23:23:16+05:30)

திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ள தூர்வாரும் பணிகளால் கடைமடை வரை தண்ணீர் செல்லும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

கொரடாச்சேரி: 
திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ள தூர்வாரும் பணிகளால் கடைமடை வரை தண்ணீர் செல்லும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் காவனூர் ஊராட்சிக்குட்பட்ட சோத்திரியம் வாய்க்காலில் நடந்து வரும் சிறப்பு தூர்வாரும் பணியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
உதவி செயற்பொறியாளர் ஸ்ரீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, தாசில்தார் ஜீவானந்தம், உதவி பொறியாளர்கள் சிதம்பரநாதன், மாணிக்கவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறப்பு தூர்வாரும் பணிகள்
திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரிட சிறப்பு தூர்வாரும் திட்டபணிகளின் கீழ் 174 பணிகள் ரூ.16 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 1284.32 கி.மீ பரப்பளவில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடந்து வந்தது. 
இதில் 155 பணிகள் என 96.13 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் வடிகால் பணிகளாகும். அந்த பணிகளும் ஓரிரு வாரங்களில் முடிக்கப்படும். 
கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லும்
எனவே திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில் கடைமடை பகுதி வரை தண்ணீர் கொண்டு செல்வதற்கு சிறப்பான முறையில் போர்க்கால அடிப்படையில், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான அனைத்து விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story