மதுகுடிப்பது தொடர்பான தகராறில் அரசு ஊழியர் அடித்துக்கொலை
வேலூரில் மதுகுடிப்பது தொடர்பான தகராறில் அரசு ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
வேலூர்
இளநிலை உதவியாளர்
வேலூர் தோட்டப்பாளையம் அருகதம்பூண்டி புதுத்தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 59). வேலூர் முன்னாள் ராணுவ வீரர் நலத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக மனைவி ரீட்டாவிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எனினும் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அவர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள லாரி பழுதுபார்க்குமிடத்தில் மயங்கி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பத்குமாரின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது காயங்களுடன் கிடந்தார். பின்னர் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சம்பவ இடத்தில் சம்பத்குமார் மதுகுடித்துள்ளார். அப்போது அங்கு வந்த அருகதம்பூண்டி பெரியதெருவை சேர்ந்த ஜெய்குமார் (30), திரவுபதிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (35), ஆகியோர் இங்கு வந்து தான் மதுகுடிக்க வேண்டுமா? இது நாங்கள் மதுகுடிக்கும் இடம் எப்படி இங்குவரலாம்? என்று கேட்டு சம்பத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் சம்பத்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story