தாராபுரம் அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.


தாராபுரம் அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.
x
தினத்தந்தி 21 Jun 2021 7:14 PM GMT (Updated: 2021-06-22T00:44:53+05:30)

தாராபுரம் அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்
தாராபுரம் அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்து விட்டு விபத்து என்று நாடகமாடியது போலீ்ஸ் விசாரணையில் அம்பலமாகியது. 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிரியாணி தகராறு
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 50).  இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கணபதி பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் சாக்கு தயாரிக்கும் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் கார்த்திக் (34) என்பவரும் வேலை செய்து வருகிறார்.  
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு கணேசனை பிரியாணி வாங்கி வரும்படி கார்த்திக் கூறியதாக தெரிகிறது. அப்போது கணேசன் தாராபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி வாங்கிக்கொண்டு போய் கார்த்திக்கிடம்  கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டு பார்த்த கார்த்திக், பிரியாணி சரியில்லை என்று அந்த பிரியாணியை கணேசன் முகத்தில் வீசியுள்ளார். இதனால்  கணேசன் ஆத்திரம் அடைந்து கார்த்திக் மனைவியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அதனை கார்த்திக்கினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அப்போது கணேசன் குடிபோதையில் இருந்துள்ளார். இதை அறிந்த கார்த்திக் சரமாரியாக கணேசனை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கணேசன் கீழே விழுந்தார். அதன்பின்னர் கார்த்திக்  தூங்கச் சென்றுள்ளார்.  கணேசனும் காலைவரை  எழுந்திருக்கவில்லை.
லாரியில் இருந்து விழுந்ததாக...
இதற்கிடையில் வழக்கம்போல் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த  கார்த்திக்கிடம், நிறுவன உரிமையாளர் ரமேஷ் என்பவர் கணேசன் எங்கே என்று கேட்டுள்ளார் அப்போது கணேசன் லாரியில் இருந்து கீழே விழுந்ததாக கூறியுள்ளார். இதனை அறிந்த  ரமேஷ் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் கணேசனை ஏற்றிவிட்டார். அப்போது கார்த்திக் இங்கு வேண்டாம் நான் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி ஆம்புலன்சை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போகச்சொன்னார். இதனை அறிந்த ஆம்புலன்ஸ் டிரைவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கணேசனை இறக்கி விட்டு சென்றுள்ளார். அப்போது கார்த்திக் அவரது உறவினர்களை வரவழைத்து கணேசன் லாரியில் இருந்து கீழே விழுந்ததாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
கொலை வழக்காக மாற்றம்
 இதனை அறிந்த ரமேஷ்  தாராபுரம் போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வாகனத்தில் அடிபட்ட வழக்காக பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் 10 மணி அளவில் கணேசன்  இறந்தார். 
இதையடுத்து கார்த்திக்கை பிடித்து போலீசார் துருவித்துருவி விசாரித்தனர். விசாரணையில் கணேசன் லாரியில் இருந்து விழவில்லை என்றும், தான் அடித்ததில் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அப்போதுதான் கணேசன் லாரியில் இருந்த விழவில்லை என்றும், கணேசனை அடித்து  கொன்று விட்டு, விபத்து  என்று கார்த்திக் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து  இந்த விபத்து  வழக்கை  போலீசார் கொலை வழக்காக மாற்றி கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story