வேடபட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வேடபட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
போடிப்பட்டி,
வேடபட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மடத்துக்குளம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சக்தி வாய்ந்த வெடிகள்
வேடப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மடத்துக்குளம் தாசில்தாரிடம் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
வேடபட்டியிலுள்ள கல் குவாரியில் அதிக சக்தி வாய்ந்த வெடி பொருட்களைப் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுகிறது.இவ்வாறு உடைத்த கற்களை கனரக வாகனங்களில் ஏற்றி இரவு பகல் இடைவெளியின்றி வெளியே கொண்டு செல்கின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. மேலும் இந்த கல் குவாரி அரசு சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் சக்தி வாய்ந்த வெடிகளை வெடிக்க செய்வதால் அதிர்வு ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்படுவதுடன் ஓடுகள் உடைந்து சேதமடைகிறது.
எனவே தினம் தினம் பயந்து பயந்து வாழ்க்கை நடத்தவேண்டிய நிலை உள்ளது. இதனால் இதய நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
மகசூல் இழப்பு
இங்கு அதிக ஆழத்தில் வெடிகள் வெடிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப் பயன்படும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வறண்டு விடுகிறது. இதனால் தண்ணீர் தேவைக்கு அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்துடன் கல் குவாரியிலிருந்து வெளியேறும் வெடிபொருட்களின் நச்சுக்களும், பாறைக் கழிவுகளும் விவசாயப் பயிர்களில் படிந்து மலட்டுத் தன்மை ஏற்படுவதால் மகசூல் இழப்பை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே அரசு சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யவும், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல் குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story