கைத்தறி ராட்டையை சேதப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்; கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி மனு


கைத்தறி ராட்டையை சேதப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்; கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி மனு
x
தினத்தந்தி 21 Jun 2021 7:40 PM GMT (Updated: 2021-06-22T01:10:14+05:30)

கைத்தறி ராட்டையை சேதப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பழனியை சேர்ந்த தம்பதி மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்:
கைத்தறி ராட்டையை சேதப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பழனியை சேர்ந்த தம்பதி மனு கொடுத்தனர். 
சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்
ஊரடங்கு அமலில் இருப்பதால் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் அந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர். 
இந்தநிலையில் பழனியை அடுத்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த நெசவு தொழிலாளியான எல்லத்துரை என்பவர் தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர்களின் கைகளில் தறி மற்றும் ராட்டை இருந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆண்டிப்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க முயன்ற போது அந்த பகுதியில் இருந்தவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த தறி, ராட்டையை சேதப்படுத்திவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் அறிவுறுத்தியதன் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கோரிக்கை மனுவை போட்டுச்சென்றனர்.
மருத்துவ கழிவுகள்
இதேபோல் செட்டிநாயக்கன்பட்டி 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் செல்வநாயகம், கலெக்டர் விசாகனிடம் 2 கோரிக்கை மனுக்களை கொடுத்தார். இதில் ஒரு மனுவில் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள செங்குளத்தில் பிளாஸ்டிக் பைகளில் மருத்துவ கழிவுகளை அடைத்து மர்ம நபர்கள் கொட்டிச்செல்கின்றனர். இதனை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு மனுவில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம், வங்கிகள், தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இவை குறைந்த எண்ணிக்கையிலேயே செயல்படுகின்றன. இதனால் சான்றிதழ்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே கூடுதலாக இ-சேவை மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, கலெக்டரிடம் கொடுத்த மனுவில் திண்டுக்கல் பாறைப்பட்டி, ஏ.பி.நகர், பெரியபள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றால் நிலத்தடி நீர்மட்டம் மாசடைவதுடன், விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Next Story