மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தால்-மாநில அரசை ஊராட்சி என்று அழைக்கலாமா?-எச்.ராஜா கேள்வி


மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தால்-மாநில அரசை ஊராட்சி என்று அழைக்கலாமா?-எச்.ராஜா கேள்வி
x
தினத்தந்தி 22 Jun 2021 1:21 AM IST (Updated: 22 Jun 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தால் மாநில அரசை ஊராட்சி என்று அழைக்கலாமா? என எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கையில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொள்கிறது. பல கோவில்கள் இருந்த இடத்தில் தற்போது வணிக வளாகங்கள் உள்ளன. கடந்த 7-6-2021 அன்று மதுரை ஐகோர்ட்டு தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பாக 76 உத்தரவுகளை பிறப்பித்தது. அவற்றை 12 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தது. அதில் 31-வது உத்தரவாக ஒவ்வொரு மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கமிட்டி அமைத்து மாவட்டத்தில் உள்ள கோவில்கள் குறித்த முழு விவரம் அதாவது கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், கடைகள், வீடுகள் எவ்வளவு உள்ளன? அதில் எவையெல்லாம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்ற முழு விவரமும் சேகரிக்க வேண்டும். அத்துடன் கோவில் இடம் அனைத்தையும் கையகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கையால் தற்போது சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 142 ஏக்கரில் 10 ஏக்கரை மீட்டுள்ளனர். மீதியுள்ள இடத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால் மாநில அரசை ஊராட்சி என்று அழைக்கலாமா? நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பால் வந்துள்ளது. இதனால் இடஒதுக்கீடு எதுவும் பாதிக்கப்படவில்லை. 2004-ல் இருந்து 2016 வரை அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 202 பேர் தான் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யபட்டுள்ளனர்.ஆனால் சென்ற ஆண்டு 400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சிவகங்கை நகர  பா.ஜனதா தலைவர் தனசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story