ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து திருச்சிக்கு 80 டன் ஆக்சிஜன் வந்தது
ஒடிசாவில் இருந்து திருச்சிக்கு 80 டன் ஆக்சிஜன் வந்தது.
திருச்சி
80 டன் ஆக்சிஜன்
இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தால் பலர் நோய் தொற்றுக்கு ஆளாக்கப்பட்டனர். இதனால், பல ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, நாடு முழுவதும் 20 ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு சிலிண்டர் வேகன்கள் மூலம் திரவ ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருச்சி முதலியார் சத்திரம் ரெயில்வே குட்ஷெட் யார்டுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கடந்த 5-ந் தேதி 80 டன், 7-ந் தேதி 80 டன் வந்தது. 10-ந் தேதி 80 டன், 12-ந் தேதி 120 டன் மற்றும் 16-ந் தேதி 120 டன் ஆக்சிஜன் வந்தது.
இந்தநிலையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலா செயில் நிறுவனத்தில் இருந்து 4 சிலிண்டர் வேகன்களில் தலா 20 டன் திரவ ஆக்சிஜன் வீதம் மொத்தம் 80 டன் நேற்று மாலை திருச்சி குட்ஷெட் யார்வுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. திருச்சிக்கு இத்துடன் 6 முறை ஆக்சிஜன் வந்துள்ளது. அவற்றை பரிமாற்றம் செய்து சிலிண்டர் லாரிகள் மூலம் இதர ஊர்களின் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்திட போதிய ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் இல்லாத காரணத்தால் அவை சிலிண்டர் வேகன்களுடன் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவை இறக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால் ஆக்சிஜன் தேவையும் குறைந்து விட்டது. இருப்பினும் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. எனவே, மத்திய அரசால் கொடுக்கப்படுகிற ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ள அரசு ஆஸ்பத்திரிகள் ஆயத்தமாகி உள்ளது. தேவைக்கேற்ப ரெயிலில் வந்த ஆக்சிஜன் ஒவ்வொரு மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தநிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கும் வகையில், தூத்துக்குடியில் மூடிக்கிடந்த ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு அங்கு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட்
நேற்று ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து 48 டன் ஆக்சிஜன் ஒரு லாரிக்கு 16 டன் வீதம் ஏற்றப்பட்டு ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் அவை புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகிக்கப்பட்டது
Related Tags :
Next Story