பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் என்ஜினீயர் தீக்குளிக்க முயற்சி


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் என்ஜினீயர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 22 Jun 2021 2:30 AM IST (Updated: 22 Jun 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை மீட்டு தருமாறு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் என்ஜினீயர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர்:

மண்எண்ணெய் கேனுடன்...
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் திடீரென்று மண்எண்ணெய் கேனுடன் ஓடி வந்தார். பின்னர் அவர் கேனின் மூடியை கழற்றி தீக்குளிப்பதற்காக மண்எண்ணெயை தனது உடலில் ஊற்ற முயன்றார்.
இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் வளர்மதி வேகமாக ஓடிச்சென்று அந்த வாலிபரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தார். பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜ் மகன் பழமலை (வயது 23) என்பதும், அவர் என்ஜினீயரிங் படித்துள்ளதும் தெரியவந்தது.
நிலத்தை வாங்கினர்
மேலும் பழமலை தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது;-
எனது தாத்தா பெருமாளுக்கு அரசு நிலம் வழங்கியிருந்தது. தாத்தா இறந்த பிறகு, பாட்டி காமாட்சியும், எனது தந்தை நடராஜும் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் எனது அத்தையிடம், சிலர் அந்த நிலத்தை வாங்கி கிரைய பத்திரம் செய்துள்ளனர். இதுகுறித்து எனது பாட்டி, மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்து நான், சிலருடன் சேர்ந்து எனது அத்தையிடம் கேட்க சென்றேன்.
பொய் புகார்
அப்போது நான், அவரது வீட்டில் பணம் திருடி விட்டதாகவும், என்னுடன் வந்த ஒருவர், எனது அத்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது பாட்டிக்கும், தந்தைக்கும் சேர வேண்டிய நிலத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டு தர வேண்டும் என்பதற்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தேன்.
இவ்வாறு பழமலை கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் என்ஜினீயர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story