குளத்தில் கார் பாய்ந்த விபத்தில் தந்தை-மகள் பலி


குளத்தில் கார் பாய்ந்த விபத்தில் தந்தை-மகள் பலி
x
தினத்தந்தி 22 Jun 2021 2:30 AM IST (Updated: 22 Jun 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே குளத்தில் கார் பாய்ந்த விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகள் நீந்தி உயிர் தப்பினார்.

கருங்கல்:
கருங்கல் அருகே குளத்தில் கார் பாய்ந்த விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகள் நீந்தி உயிர் தப்பினார்.
கோவிலுக்கு புறப்பட்டனர்
குமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), ரப்பர் விவசாயி. இவருடைய மூத்த மகள் ஷாமினி (21), கருங்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இளைய மகள் ஷாலினி (20), குழித்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 
நேற்று அதிகாலை ராஜேந்திரனும், 2 மகள்களும் ஈத்தாமொழி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். காரை ராஜேந்திரன் ஓட்டி சென்றார். அவர்கள் கருங்கலில் உள்ள ஒரு நண்பரை பார்த்துவிட்டு பூக்கடை சாலையில் சென்று கொண்டிருந்தனர். செல்லம்கோணம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக கார், ராஜேந்திரனின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. 
குளத்துக்குள் பாய்ந்தது
இதனால் பதற்றம் அடைந்த ராஜேந்திரன் காரை கட்டுப்படுத்த முயன்றார். எனினும் முடியவில்லை. இதனையடுத்து கார் வேகமாக சென்று சாலையோரம் உள்ள குளத்துக்குள் பாய்ந்தது. குளத்தில் தண்ணீர் நிறைய இருந்ததால் கார் மூழ்க தொடங்கியது. காருக்குள் இருந்த ராஜேந்திரனும், அவருடைய மகள்களும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர். 
அப்போது இளைய மகள் ஷாலினி, காரின் கதவை திறந்து நீச்சல் அடித்து தண்ணீரில் இருந்து வெளியே வந்தார். ஆனால் ராேஜந்திரன் மற்றும் ஷாமினியால் காரில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் காருடன் சோ்ந்து தண்ணீரில் மூழ்கினர். 
தந்தை-மகள் சாவு
இதை பாா்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதிபொதுமக்கள், குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி சேம் ராபின்சன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக மீட்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரில் மூழ்கி கிடந்த காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் ராஜேந்திரனையும், ஷாமினியையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது. காருக்குள் பிணமாக கிடந்த 2 உடல்களையும் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெனிட்டஸ் ஜேசுபாதம், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் நாயர் மற்றும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தந்தை, சகோதரி உடல்களை பார்த்து ஷாலினி கதறி அழுதார்.
சோகம்
கார் குளத்தில் பாய்ந்து தந்தை, மகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  மேலும் இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story